RINTV.VETTAI.GALHINNA TODAY


 

சிந்திக்க சில வரிகள்!

(சமூக வலைத்தளத்தில் கண்ட ஒரு அற்புதமான பதிவை Ggi Jabeen Mohamed இவ்வாறு தெளிவு படுத்தி எழுதியுள்ளார்)

அனைத்து பாடங்களிலும் சித்தி அடைந்த மாணவர்களை வழிநடத்த ஆயிரம் வழிகள் இருந்தாலும்,சித்தி அடையாத மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் செல்லலாம் என்ற ஒரு புதுமையும் கல்வித் திட்டத்தில் உண்டு என்ற விடயத்தை இந்த கடிதத்தில்   உணர்த்தியுள்ளார்

2010 க்கு பிறகு புதிதாக கல்வி திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் ஆயிரம் பாடசாலை திட்டம் முதல் தொடர்ச்சியாக அரசின் புதிய திட்டங்களை  பாடசாலைகளில் எடுத்து நடத்த வேண்டும்  என்ற சில விதிமுறைகளை ஏற்பாடு செய்துள்ளது.

 அவ்வாறு இருந்த போதிலும் எமது சமூகத்தில் பாடசாலை மற்றும் அதன் நிர்வாகிகள் பல நொண்டி சாட்டுகளை முன்வைத்து அந்தத் திட்டங்களை பாடசாலைக்குள் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்றார்கள்.

அந்த நிர்வாகிகள் எதிர்கால சந்ததிகளின்  வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்பதை நாம் பார்க்கின்றோம்.

அரசின் புதிய திட்டங்கள் உலகத் தொழில் சந்தையை முன்னோக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை பாடசாலை நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நவீன கல்வி திட்டமானது  சித்தி பெறாத மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் வரை செல்வதற்கான மாற்று வழிகள் உண்டு என்பதனை பாடசாலை நிர்வாகங்களும் ஊர்களில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய படித்த புத்திஜீவிகள் என்று சொல்லக் கூடியவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

சித்தி அடையாத மாணவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை என்று GGI Jabeen Mohamed அவர்கள் அவருடைய கருத்தையும் இந்த கடிதத்துடன் இணைத்து பகிர்ந்துள்ளார்.

ஆம் அவர் கூறிய விடயங்களிலும் எமது சமூகம் ,சமூகம் சார்ந்த புத்திஜீவிகள் பாடசாலை நிர்வாகங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உலகத் தொழில் சந்தைக்காக எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு தொடர்ந்து, சித்தி பெறாத மாணவருக்கு தந்தை எழுதிய மடல் 

எல்லாப் பாடங்களிலும் F  தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கூரிய பதில்.

பரீட்சையில் தோல்வி அடைந்தவர்களுக்கான  பதிவு இது 


அன்புள்ள மகனே! 

நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கண்டித்து திட்டித் தீர்க்கவோ இல்லை,

உன்னால் முடிந்ததை நீ செய்தாய் , நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருக்கின்ராய் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய கடமை என்னையே சாரும். 

என் அருமை மகனே!

தயவு செய்து உன் தோல்வியால் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து தயக்கமோ அடைந்து விடாதே.

 ஏனெனில் வெற்றி பெற்றவர்களின் பின்னாலே தான் இந்த உலகமே நிற்கும்.தோல்வி அடைத்தவர்களை உதறித்தள்ளும் ஆனால் தோல்வி அடைந்தவர்கள்தான் வாழ்கையில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என்ற உண்மை உனக்குப் புரிவதோடு வெற்றிக்காக நீ உழைக்கத் தொடங்க வேண்டும் மகனே.

பிறப்பிலேயே சிலருக்கு அறிவை நிறையக் கொடுத்து  மற்றவர்களை சோதிக்கிறான், கல்வி அறிவு நிறையப் பெற்றவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெர்றவர்களல்ல , வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அறிவும் , வழியும் அனுபவங்களும் முற்றிலும் வேறானவை. 

ஓடம் கவிழ்ந்த பொழுது நீந்தத் தெரியாத மிகப் பெரும் கல்விமான் மூழ்கி இறந்து விடுகிறான் ,

 நீச்சல் தெரிந்த பாமரன் பிழைத்து விடுகிறான். 

கல்வியறிவு எதுவும் இல்லாது எழுதப் படிக்கக் கூடத் தெரியாத நான் மிகவும் உயர்ந்த கல்வி கற்றவர்களுக்கு நிகரான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லையா?.

எவரிடமும் கையேந்தி நிற்காமல் எனது சிறு தொழில் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்தவில்லையா,?. 

மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவில்லையா ?

 முடிந்தளவு ஏழைகள் மற்றும் வேண்டப்பட்டோருக்கு உதவவில்லையா?

 வங்கிகள் மற்றைய நிறுவனகளுடன் நான் கொடுக்கல் வாங்கல் செய்யும் அறிவு எங்கிருந்து வந்தது, 

இவை எனது அனுபவக் கல்வியால் வந்தவை மகனே.

என் அருமை மகனே!

நீயும் உனது வாழ்க்கையை நீயே செதுக்கிக் கொள், எங்கள்  கல்வி  முறைமையும்  பரீட்சை முறைமையும் உனக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொண்டுவர பொருத்தமானதாக  இல்லை என்பதைப் புரிந்து கொள். கல்வியிலே உச்சம்  பெற்ற  பட்டதாரி மாணவர்கள் வேலை கேட்டு வீதிக்கிறங்கி  போராடும் நிலைக்கு தள்ளியது  தான் எங்கள் கல்வி முறை.  

ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதோ ஒரு திறமையை கொடுத்துள்ளான், அந்தத் திறமைகளில் உனது திறமை என்ன என்பதை  கண்டு பிடி. அதில் உனது கடின உழைப்பைச் செலுத்து.தன் நம்பிக்கையையும் நேர்மையையும் உனது மூலதனமாகக் கொள்.

 நீயே உனது சொந்தக் காலில் மற்றவர்களுக்குக் கையேந்தாமல் தொழிலைக் கற்றுக்கொள்.

 கற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பைக் கொடுக்குமளவுக்குக் நீ முன்னேற முயற்சி செய் உன்னால் முடியும் மகனே/ 

இப்படிக்கு அன்புள்ள அப்பா

பரீட்சையில் சித்தி பெறாத மாணவனுக்கு தந்தை எழுதிய கடிதம் என்ற தலைப்பில் இந்த கடிதத்தை நாம் பார்த்தோம்.கண்டிப்பாக சமூகத்தில் எதிர்கால சந்ததிகளுக்காக தெளிவான பாதையை காட்டிக் கொடுப்பது எங்கள் அனைவரின் பொறுப்பு என்று கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்




Post a Comment

0 Comments